கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.20 லட்சம் கன அடி நீர் திறப்பு! ஆர்ப்பரித்து வரும் காவிரி!
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பிவிட்டன. இந்நிலையில், கபினி அணைக்கு இன்று காலை 54,137 கனஅடி நீர் வந்த நிலையில் அணையில் இருந்து 70,750 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அதேபோல் கேஆர்எஸ் அணைக்கு 95,502 கனஅடி நீர் வந்த நிலையில் அணையில் இருந்து 1 லட்சத்து 3 ஆயிரத்து 222 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் தற்போது அணைகளுக்கான நீர் வரத்து இன்னும் அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளுக்கு வரும் தண்ணீர் என்பது அப்படியே காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
அதன்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 50,000 கன அடிநீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கர்நாடகாவில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்க உள்ளது. இதனால், காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.