For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!

08:56 AM Nov 08, 2023 IST | Web Editor
பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு
Advertisement

தீபாவளி பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertisement

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனுமதிக்கப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது.

மேலும் தடை செய்யப்பட்ட சீனத் தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ சட்டவிரோதமாகும். விபரீதச் செயல்கள் வேண்டாம்: பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள் உள்ள இடத்தில் வெடிக்கக் கூடாது. வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகேயும், பெட்ரோல் பங்க் அருகேயும் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை வெடிக்கும் பொழுது தகர டப்பாக்களை போட்டு மூடினால், டப்பா தூக்கி எறியப்படலாம்; அதனால் பல விபத்துகள் நேரிடக்கூடும்; எனவே இதுபோன்ற விபரீதச் செயல்களில் ஈடுபடக் கூடாது. குடிசைப் பகுதிகளிலும், மாடிக் கட்டடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது.

எரியும் விளக்கின் அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது. ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் உலா்த்தக்கூடாது. பெரியவா்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளைக் கொளுத்த அனுமதிக்கக் கூடாது. குடிசைப் பகுதிகளில் வெடிக்க வேண்டாம்: எக்காரணத்தைக் கொண்டும் குடிசைப் பகுதிகளில் வானத்தில் வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசு விற்பனையாளா்கள், கடையில் அல்லது கடை அருகில் மெழுகுவா்த்தியையோ பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ உபயோகிக்கக் கூடாது. பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுவத்தியை கொளுத்தி வைக்கக்கூடாது.

பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுவத்தியை பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகள் வெடித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல் துறை அவசர தொலைபேசி உதவி எண் 100, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அவசர தொலைபேசி உதவி எண் 101 ஆகியவற்றை தொடர்பு கொண்டு அழைக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement