5 ஆண்டுகளில் 183 குழந்தைத் திருமணங்கள் - ஆர்டிஐ தகவல்!
மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தை திருமணம் எத்தனை நடைபெற்றுள்ளது, எத்தனை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன் என்பவர் மாவட்ட சமூக நலத்துறைக்கு ஆர்டிஐ மூலம் கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு சமூக நலத்துறை அதிகாரி பதில் அளித்துள்ளார்.
அதன்படி இது குறித்து சமூக ஆர்வலர் மோகன் கூறுகையில், "கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 24 ஆம் ஆண்டு நவம்பர் வரையில் 690 குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் 507 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 183 குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளதாகவும், குழந்தை திருமணங்களை நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆர்டிஐ மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 53 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் தெரிய வந்துள்ளது. அதே போல குழந்தை திருமணத்தை தடுக்க மத்திய, மாநில அரசிடம் இருந்து எந்த நிதியும் பெறவில்லை, குழந்தைத் திருமணங்களை தடுத்தல் மற்றும் அதிகரிக்கும் போக்சோ வழக்குகளை குறைக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.