“14 ஆண்டுகள் கூட்டணி... தமிழகத்திற்கு திமுக செய்தது என்ன?” - இபிஎஸ் கேள்வி
மத்தியில் காங்கிரசுடன் 14 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த திமுக, தமிழகத்திற்கு செய்தது என்ன? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக கூட்டணியில், திருவள்ளூர் மக்களவை தொகுதியில், தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து, திருவள்ளூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது :
“மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து, பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வஞ்சிக்கிறது. திமுக அரசால் மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் எந்த நன்மையும் இல்லை. திமுக அரசு எங்களுடைய திட்டங்கள் அனைத்தையும் நிராகரித்துவிட்டது.
செல்லும் இடங்களில் எல்லாம் எடப்பாடி பழனிசாமி துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று கூறி வருகின்றனர். திமுக ஆட்சியில், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, பம்ப்செட்டுக்கு மின் கட்டணத்திற்கு ஒரு ரூபாய் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது கோவையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். விவசாயிகளை குருவியை சுடுவது போல் சுட்டதுதான் திமுக அரசு.
தமிழகம் இந்தியாவிலேயே பின்னோக்கிச் செல்கிறது. திமுக ஆட்சி தான் அதற்கு காரணம். பிரம்மாண்ட கல்லூரி, பிரம்மாண்ட மருத்துவமனைகள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டுள்ளது. 11 அரசு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தது அதிமுக ஆட்சி. ஏழை எளிய மக்களுக்காக இவையெல்லாம் கொண்டுவரப்பட்டது.
அதிமுக ஆட்சியில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவடியில் ரூ.83 கோடி செலவில் பொது மருத்துவமனை கட்டப்பட்டது. சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கப்பட்டது.”
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.