ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம், பஜனை கோவில்
தெருவைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் - தாட்சாயணி தம்பதி. இவர்களது மகன் தமிழரசன் (12). இவர் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், தமிழரசன் இன்று (மார்ச் 28) மதியம் குறிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் மூலம் சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் சுட வைத்தார்.
சிறிது நேரம் கழித்து குளிப்பதற்கு தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை அறிய,
ஹீட்டரில் கை வைத்த பார்த்ததாக தெரிகிறது. அப்போது, தமிழரசன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். தமிழரசனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு சென்னை பெருங்களத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவன் தமிழரசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.