டெல்லி அம்பேத்கர் பல்கலை.யில் 1,100 இடங்களுக்கு 11,000 விண்ணப்பங்கள்!
டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைகழகத்தில் 1100 முதுகலை படிப்புகளுக்கான இடங்களுக்கு 11000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் வரை (ஜூன் 17) அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 1100 இடங்களுக்கு தற்போதுவரை 11000 பேர் விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பல்கலைகழகத்தில் இந்த வருடம் தான் அதிகபட்ச விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் இரண்டு நாட்கள் உள்ளநிலையில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை பொருளாதாரத்திற்கு (MA Economics) அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து ஆங்கிலம் (MA English), சமூகவியல் (sociology), வணிக நிர்வாகம் (Business administration) போன்ற படிப்புகளுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் அனு சிங் லாதர் தெரிவித்துள்ளார்.
27 முதுகலை பாடப்பிரிவுகள் இங்கு உள்ள நிலையில், 21 இளங்கலை பட்டப்படிப்புகளும் இங்கு உள்ளன. இளங்கலை படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.