11 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையின்றி விடுதலை!
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று மார். 27ஆம் தேதி இலங்கை கடற்படையினால் எல்லை தாண்டி மீன்பிடித்தாக 11 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறையில் வைக்கப்பட்டிருந்த 11 மீனவர்களின் வழக்கு வரும் ஏப்.9ந்தேதி விசாரணைக்கு வர இருந்த நிலையில், இன்று இலங்கை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் மீனவர்களின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அதன் அடிப்படையில் ஊர் காவல்துறை நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் வழக்கை விசாரித்து மீனவர்கள் 11 பேரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு மீன்வளத் துறையினர் தாமாக முன்வந்து ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.