வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள் - மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் !
வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் எண்ணிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், அமெரிக்கா, இலங்கை, ஸ்பெயின், ரஷியா, இஸ்ரேல், சீனா, வங்கதேசம், ஆர்ஜென்டீனா உள்பட 86 நாடுகளின் சிறைகளில் மொத்தம் 10 ஆயிரத்து152 இந்தியர்கள் உள்ளனர்.
அதிகபட்சமாக சவூதி அரேபியாவில் 2ஆயிரத்து 633 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 ஆயிரத்து 518 பேரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் 266 இந்தியர்களும், இலங்கையில் உள்ள சிறைகளில் 98 இந்தியர்களும் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். கத்தார் சிறைகளில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 611 பேர் உள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களின், சிறையில் இருப்பவர்களையும் சேர்ந்து நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக அங்குள்ள தூதரகங்கள் கண்காணித்து வருகின்றன. இந்தியர்கள் கைது செய்யப்படுவது குறித்து தகவல் கிடைத்தால் உள்ளூர் அதிகாரிகளை தூதரகம் தொடர்பு கொண்டு விவரங்களைச் சேகரிக்கிறது.
அவர்கள் வழக்குகளை எதிர்கொள்ள உதவி அளிக்கப்படுகிறது. சிறைகளில் அவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல நாடுகளுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தையும் இந்தியா மேற்கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.