தொடர்மழையால் 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம் - இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
மயிலாடுதுறை அருகே சேமங்கலம் கிராமத்தில், கனமழையால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், 15 ஆண்டுகளாக வாய்க்காலை தூர்வாராத பொதுப்பணி துறையினரை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேமங்கலம்,
கருவாழக்கரை, ஆலவேலி கிராமங்களில் 2500 ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக இப்பகுதியில் 1000 ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இப்பகுதியில் உள்ள சேமங்கலம் வாய்க்கால், 15 ஆண்டுகளுக்கு மேலாக
தூர்வாரப்படாமலும், பூவேந்தன் வாய்க்கால் முழுமையாக தூர்வாரப்படாததால்
பயிர்களை சூழ்ந்த மழை நீரை வடியவைக்க வழி இன்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இன்று மழை இல்லாத நிலையில், தண்ணீரை வடியவைக்க முடியாததால் வாய்க்கால்களை தூர்வாரத பொதுப்பணி துறையினரை கண்டித்து சேமங்கலத்தில், வயலில் இறங்கி விவசாயிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, துரைராஜ் என்ற விவசாயி 30 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து அறுவடை செய்ய வேண்டிய ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மிதக்கிறது. வயல் குளம் போல உள்ளது பாருங்கள். இதில் நான் குளிக்கிறேன். தண்ணீர் வடிய வைக்க முடியவில்லை, எப்படி அறுவடை செய்வேன் என்று வயலில் வடியாமல் இருந்த தண்ணீரில் விழுந்து கதறி அழுதார்.