தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்: கடலூர் விவசாயிகள் வேதனை!
கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 22 செமீ மழையும், காட்டுமன்னார்கோவிலில் 14 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால், காட்டுமன்னார்கோவில் உட்பட்ட பெருங்காலூர், ராதா நல்லூர், சிவக்கம், முகையூர், மா புளியங்குடி, அத்திப்பட்டு, குச்சூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டு சாய்ந்துள்ளன.
இன்னும் சில நாட்களில் அறுவடை செய்துவிடலாம் என்று விவசாயிகள் எண்ணியிருந்த நிலையில், தற்போது பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது,
”நேற்று முதலே மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 1000 ஏக்கருக்கு மேலான நெற்பயிர்கள் மழை நீரால் சாய்ந்துள்ளது. எங்களுக்கு சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் நெற்பயிர்கள் நாசம் அடைந்து வருகிறது. சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பணியின்போது பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களுக்கு செல்லும் வடிகால் வழிகளை நெடுஞ்சாலை துறையினர் மூடிவிட்டனர். அதன் விளைவாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு வடிகால் வசதி செய்துதர வேண்டும்”
என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.