“நெல்லை மாவட்ட முழுவதும் 100% மின் இணைப்பு வழங்கப்பட்டது!” - மின்சார வாரியம் தகவல்
நெல்லை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பழுதான சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் சீரமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 100% மின் இணைப்பு வழங்கப்பட்டது என மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இதே போன்று நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் தொடர் மழை வெள்ளத்தால் ஆற்றாங்கரை தெரு, மூங்கிலடி, கீழப்பத்தை, மேலப்பத்தை, கலுங்கடி, பத்மநேரி, புலியூர்குறிச்சி, மாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தது. இதுமட்டுமல்லாது பல கிராமங்கள் தனித்தீவுகளாக மாறிய நிலையில், மொத்தமாக வெள்ள நீர் சூழ்ந்து மின்சாரம், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்தனர்.
இந்நிலையில், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் தமிழ்நாடு அரசி உயர் அதிகாரிகள் பல்வேறு தரப்பினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ள நீர் வடியவடிய படிப்படியாக மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நெல்லை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பழுதான, சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் சீரமைக்கப்பட்டு 100% மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.