79 வயதில் மனைவியுடன் சிறைக்கு செல்லும் முன்னாள் சார் பதிவாளர்! வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த ரூ.100 கோடி சொத்தை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சார் பதிவாளர் ஓய்வு பெற்று பல ஆண்டுகளுக்கு பின் 79 வயதில் சிறைக்கு செல்கிறார். மனைவிக்கும் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் ரூ.100 கோடி சொத்தை மறிமுதல் செய்யவும் ஆணை.
திருச்சியின் பல்வேறு பகுதிகளில் 1989 முதல் 1993 வரை சார்பதிவாளராக பணியாற்றியுள்ளார் ஜானகிராமன். இவர் பணியாற்றிய காலத்தில் தனது பெயரிலும் மனைவி வசந்தி பெயரிலும் ரூ.32.25 லட்சத்தில் சொத்து வாங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜானகிராமன் மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை 20 ஆண்டுகளை தாண்டி நடந்து வந்தது. இந்நிலையில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகி ராமன்,வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் இன்று தீர்ப்பளித்தார்.
இதன்படி முதல் குற்றவாளியான முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் மற்றும் இரண்டாவது குற்றவாளியான அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.