காரைக்கால் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது... விசைப்படகும் பறிமுதல்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடி மீனவர்கள் பத்து பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகையிலிருந்து மீன்பிடிக்க சென்ற இவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரைநகரில் கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்த இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையேயான மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு தீர்வு காண மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டாலும், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.