தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 முக்கிய மசோதாக்களை திரும்பப் பெற்று ஒப்புதல் அளிக்க வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு மேலான ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்தார். இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆளுநரை அமைச்சர்கள் பலமுறை சந்தித்து வலியுறுத்தினர். ஆனாலும் அவர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் ரவி தாமதப்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பியது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக வந்த மசோதாக்களை திருப்பி அனுப்பிவிட்டு, மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது என அரசியலமைப்பின் 200-வது பிரிவை சுட்டிக்காட்டினர். மேலும், ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் அழைத்து சுமுகமாக பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அப்போது சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகள் இருந்ததால் அந்தப் பணிகளை பார்வையிடுவதற்காக அப்போது ஆலோசனை நடத்தவில்லை. எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க தமிழ்நாடு அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டது. அதன்படி ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருமகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜ கண்ணப்பன் ஆகியோர் உடன் சென்றனர். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது.
ஆளுநருடனான சந்திப்பின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அளித்தார். அந்தக் கடிதத்தில் அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின் மீதும் மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். எனவே, நிலுவையிலுள்ள மசோதாக்கள், கோப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நிர்வாகம் மற்றும் பொது மக்களின் நலன் கருதி அவற்றுக்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 முக்கிய மசோதாக்களை திரும்பப் பெற்று ஒப்புதல் அளிக்க வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.