For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! 3 பேர் கைது!

09:00 PM Mar 10, 2024 IST | Web Editor
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ 1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்  3 பேர் கைது
Advertisement

தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய்  மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

சென்னையில் விமானம் மூலமாக தாய்லாந்து நாட்டில் இருந்து உயர் ரக கஞ்சா கடத்தி
வரப்பட்டு, சப்ளை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஷ்ரா கர்க்கின் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாங்காடு பகுதியைச் சேர்ந்த 65 வயதான சண்முகராஜ் என்பவர் கஞ்சா பொட்டலங்களை சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்து வருகிறார் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரணை மேற்கொள்ளபட்டதில், தாய்லாந்தில் உள்ள சண்முகராஜின் மகன்
கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இப்ராஹிம் இருவரும் தாய்லாந்து நாட்டில் உள்ள
உயர் ரக கஞ்சாவை பயணிகள் போல வரும் நபர் மூலம் விமான மூலமாக சென்னைக்கு
அனுப்பி வைக்கின்றனர். அந்த கஞ்சா பார்சலை கார்த்திக்கின் தந்தையான சண்முகராஜன் வாங்கி சப்ளை செய்து வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

சண்முகராஜ் கொடுத்த தகவலின் மூலம் இளையான்குடியைச் சேர்ந்த யாசர் அராபத்
மற்றும் முஹம்மது ஜைனுல் ரியாஸ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். யாசர் அராபத் சுற்றுலா பயணி போன்று தாய்லாந்து நாட்டிற்கு சென்று, உயர் ரக கஞ்சா பார்சலை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சிங்கப்பூர், சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர் தனியார் பேருந்தில் திருச்சியில் இருந்து சென்னை வந்து கார்த்திக்கின் தந்தை சண்முகராஜிடம் கொண்டு வந்த கஞ்சா பார்சலை சேர்க்கிறார்.

தாய்லாந்தில் உள்ள கார்த்திக் கூறும் தகவலின் அடிப்படையில், கஞ்சா பொட்டலங்களாக முஹம்மது ஜைனுல் ரியாஸ் பிரித்துக் கொடுக்க, அவற்றை கொண்டு சென்று சண்முகராஜன் சப்ளை செய்துள்ளார். உலகிலேயே தாய்லாந்து நாட்டில் தான் கஞ்சா உபயோகம் மருத்துவத்திற்காக அனுமதிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு அந்நாட்டிற்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு கஞ்சா இலைகள், பூக்கள், விதைகள் மற்றும் சாக்லேட் வடிவில் போதை தரும் கஞ்சா உணவுகள் என பலவித தயாரிப்புகள் விற்பனைக்கு தாய்லாந்தில் கிடைக்கின்றன.

மேலும், அங்குள்ள கஞ்சா பதப்படுத்தப்பட்டு உயர் ரக கஞ்சாவாக வெளிநாடுகளுக்கு
சட்ட விரோதமாக அனுப்பப்பட்டு வருகிறது. தாய்லாந்தில் உள்ள கஞ்சா ஒரு கிராம்
ஒன்றிற்கு சென்னையில் பத்தாயிரம் வரை விற்கப்படுகிறது என காவல்துறையினர்
கூறுகின்றனர். அதன்படி இந்த கும்பலிடம் பறிமுதல் செய்யப்பட்ட 1.6 கிலோ தாய்லாந்து கஞ்சா இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் வரை விற்கப்படும் என தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சண்முக ராஜன் உட்பட 3 பேரும் அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்கு பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்திது பேசிய வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் கூறியதாவது,

“தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி போதை பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கார்த்திக் என்ற நபர் தாய்லாந்தில் இருந்து மாங்காடு பகுதியில் இருக்கும் அவரது தந்தை சண்முகராஜ் என்பவருக்கு உயர் ரக கஞ்சா அனுப்ப , சண்முக ராஜ் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு யாசர் அராபத் மற்றும் முஹம்மது ஜைனுல் ரியாஸ் என்பவர்கள் உதவியுடன் விநியோகம் செய்து வந்துள்ளார். அவர்கள் விற்பனை செய்து வந்த ஆரம்ப கட்டத்திலேயே 3 நபர்களை கைது செய்துள்ளோம். மேலும் கார்த்திக் என்ற நபரிடமும் தொடந்து விசாரணை மேற்கொள்வோம்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கைகளை காவல்துறை
எடுத்து வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கூட ஹரியானாவில் போதை மாத்திரைகளை கடத்திய நபரை கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளோம். அதேபோன்று மருத்துவமனைக்காக வரக்கூடிய மருந்துகள் போதை மாத்திரையாக பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்தி வருகின்றோம். கடந்த சில மாதங்களாக போதை பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வருகிறார்கள்.

அதில் குறிப்பாக மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களுக்கு சென்று போதைப்பொருட்களை வாங்கி வருகிறார்கள். அந்த இடத்திற்கும் சென்று விற்பனை செய்யும் நபர்களை நாங்கள் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் சுகாதாரத்துறை மூலமாக மருந்துகள் வெளியே விற்பனை செய்யப்படுவதையும் கண்டறிந்து வருகிறோம். இதனிடையே இந்த போதைப் பொருள் விவகாரத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதி இருக்கின்றோம்” என அவர் கூறினார்.

Tags :
Advertisement