"2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள்" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தொடர்ந்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (பிப். 19) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. இந்த பட்ஜெட் உரையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது,
"கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களின் மொத்த சாகுபடி இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. உணவு தானிய உற்பத்தி 116 லட்சம் மெட்ரிக் டன்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலையில் தொடர்ந்து விவசாய கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 45 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.