மதுரை | டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!
மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஏர், கலப்பை, நெல் பயிர், வாழைக்கன்றுகளை கைகளில் ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாயி சங்கம் மற்றும் இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை சந்திப்பில் டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஏல உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், தொன்மையான தொல்லியல் சின்னங்கள்- பல்லுயிர் சூழல்கள் அடங்கியுள்ள மதுரை மாவட்டத்தை பாரம்பரிய தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவித்திட வேண்டும், முல்லை பெரியாறு பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தினை சட்டம் இயற்ற வேண்டும் என விவசாயிகள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மதுரை மாவட்டம் நாயக்கர் பட்டி, அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி, வெள்ளரிப்பட்டி, மாங்குளம், நரசிங்கம்பட்டி, தெற்கு தெரு, கல்லம்பட்டி, புளிப்பட்டி உள்ளிட்ட 13 கிராம விவசாயிகள் 200 க்கும் மேற்பட்டோர் ஏர், கலப்பை, நெல் பயிர், வாழைக்கன்றுகளை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்றால் தமிழ்நாடு முழுக்க போராட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம் என விவசாயி சங்கமும் மற்றும் இந்திய தொழிலாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளனர்.