நீலகிரி | விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை - காவல்துறை தீவிர விசாரணை!
நீலகிரியில் விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடித்து தப்பிச் சென்றவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே புதுமந்து கவுட சோலை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (50). இவர் மனைவி தனலட்சுமியுடன் வசித்து வருகிறார். விவசாயியான இவர் இன்று காலை உதகையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு அவரது மனைவியுடன் சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரின் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டில் உள்ள பீரோவில் வைக்கபட்டிருந்த சுமார் 50 சவரன் நகை கொள்ளையானதை கண்டு உடனடியாக புதுமந்து காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுமந்து காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வீட்டிற்குள்ளும் சுற்றுவட்டார பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த நகை கொள்ளை சம்பவத்தில் அப்பகுதியில் தோட்டத் தொழில் ஈடுபட்டு வந்த வட மாநிலத்தினர் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.