திருச்செந்தூர் | கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாடு - 3 மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு மீட்பு துறையினர் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காப்பாற்றினார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள நடுநாலுமூலை கிணறு கிராமத்தைச் சேர்ந்த பால்துரை என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். மாடுகளைத் தினமும் அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் இரவு நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கமாக இருந்துள்ளது. அதிகாலையில் பால்துரை பால் வியாபாரம் செய்வதற்காகப் பால் கறப்பதற்கு மாடுகளைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்.
அதில் ஒரு பசுமாடு மட்டும் காணாமல் போன நிலையில் உடனே பால்துரை தோட்டப் பகுதிகளில் தேடியுள்ளார். இதில் தோட்டத்திலிருந்த தரைமட்ட கிணற்றுக்குள் பசுமாடு விழுந்து ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பால்துரை என்ன செய்வதென்று அறியாமல் உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்பு மீட்பு
துறைக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்பு மீட்பு துறையினர் சிறப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்பு மீட்புத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். கிணற்றுக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பசு மாட்டைத் தீயணைப்பு மீட்பு வீரர்கள் மற்றும் கிராம இளைஞர்களும் சேர்ந்து கயிற்றின் மூலமாகக் கட்டிக்கொண்டு சுமார் 3 மணி நேரத்திற்குப் பின் பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.
மாட்டின் உரிமையாளர் மற்றும் இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் தீயணைப்புத்துறை மீட்பு வீரர்களுக்கு நன்றியைத் தெரிவித்தனர். கிணற்றுக்குள் விழுந்த மாட்டினை உடனடியாக மீட்டுக் கொடுத்த தீயணைப்பு மீட்பு துறை வீரர்களுக்கு ஊர்மக்களும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.