Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம்”-செல்வபெருந்தகை அறிவிப்பு!

டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது வாக்கு திருட்டு குற்றசாட்டுகளை முன் வைத்த நிலையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம் நடத்த இருப்பதாக செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.
06:28 PM Aug 10, 2025 IST | Web Editor
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது வாக்கு திருட்டு குற்றசாட்டுகளை முன் வைத்த நிலையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம் நடத்த இருப்பதாக செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.
Advertisement

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில், கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். போலி வாக்காளர் பட்டியல், வெவ்வேறு குடும்பத்தினருக்கு ஒரே விலாசம் போன்ற முறைகேடுகள் மூலம் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் வாக்காளர் பட்டியலில் இல்லாத விலாசங்களில் பலரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன மற்றும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த பல வாக்காளர்களுக்கு ஒரே விலாசம் பதிவு செய்யப்பட்டுள்ளது போன்ற அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன் வைத்து அதிரவைத்தார்.

Advertisement

இந்த நிலையில்  தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை கண்டன ஆர்பாட்டம் நடத்தப்போவதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது  தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். ஆனால் அதற்கு நேரடியாக பதில் கூற முன்வராத தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி அவர்கள் பிரமாணம் எடுத்து குற்றச்சாட்டை கூறினால் நடவடிக்கை எடுக்க தயார் என கூறியிருக்கிறது. ஊடகங்கள் வாயிலாக திரை வெளியீட்டின் மூலம் புள்ளி விபரங்களோடு குற்றச்சாட்டுக்களை கூறிய பிறகு தேர்தல் ஆணையம் திசை திருப்புகிற வகையில் பதில் கூறுவது பொறுப்பற்ற செயலாகும். இந்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் மீது 5 குற்றச்சாட்டுக்களை எழுப்பி இதற்கு தேர்தல் ஆணையம் பதில் கூற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நடைபெறவுள்ள பீஹார் சட்டமன்ற தேர்தலையொட்டி 65 லட்சம் வாக்காளர்கள் கொண்ட பட்டியலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் வந்தபோது தேர்தல் ஆணையம் வழங்க மறுத்துவிட்டது சுதந்திரமான தேர்தலுக்கு விடப்பட்ட சவாலாகும். இந்த மறுப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாக நம்புவதற்கு இடமிருக்கிறது.

அதன்படி, முதல் கேள்வியாக டிஜிட்டல் வடிவத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை இந்திய மக்கள் படிக்கிற வகையில் ஏன் வெளியிட முன்வரவில்லை?. இரண்டாவதாக, தேர்தல் ஆணையம் தன்னிடம் உள்ள ஆதாரங்களை ஏன் அழிக்கிறது?. மூன்றாவதாக, தேர்தல் ஆணையம் பெருமளவில் வாக்காளர் பட்டியலில் மோசடி செய்வது ஏன்?. நான்காவதாக, எதிர்க்கட்சிகள் கூறுகிற குற்றச்சாட்டுக்கு பதில் கூறாமல் மிரட்டுவது ஏன்?. ஐந்தாவது கேள்வியாக, பாஜகவின் ஏஜென்ட் ஆக தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? என்று பகிரங்கமாக ராகுல் காந்தி கேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறார்.

டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கினால் 30 வினாடிகளில் போலி வாக்காளர்களை கண்டுபிடித்து விடலாம் என்று ராகுல் காந்தி கூறியதற்கு பிறகு அதை வழங்க மறுப்பது பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது என்ற குற்றச்சாட்டு உறுதியாகிறது. எனவே தேர்தல் முறைகேடு குற்றங்களுக்கு வாக்காளர் பட்டியல் ஆதாரமாக இருப்பதால் அதை டிஜிட்டல் வடிவத்தில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். ஒரு கோடி போலி வாக்காளர்கள் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்களித்துள்ளனர் என்று ஆதாரத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் கூற வேண்டும்.

ராகுல் காந்தி அவர்கள் தோலுரித்து காட்டிய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளையும், பாஜகவின் வெற்றிக்கு துணை போவதையும் கண்டிக்கிற வகையில் எனது தலைமையில் நாளை (11.08.2025) திங்கட்கிழமை மாலை 04:00 மணியளவில் சென்னை, சைதாபேட்டை, பனகல் மாளிகை அருகில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் முன்னின்று நடத்தும் கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று குரல் எழுப்ப வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :
electiocommissionIndialatestNewsrahulganthiselvaperunthagaiTNCongress
Advertisement
Next Article