ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் | மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர் மருத்துவர் ஒருவர், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 6 பேர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.
கந்தர்பால் மாவட்டத்தில் சோனம்மார்க் எனுமிடத்தில் ஞாயிறு மாலை இத்தாக்குதல் நடந்துள்ளது. அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பணி புரிய வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. அப்பகுதியை சுற்றிவளைத்துள்ள பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கிடையே பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டத் தகவலின் படி இந்தத் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் ஈடுபட்டதாகத் தெரிகிறது. தொழிலாளிகள் பணியை முடித்து மாலையில் தம் கூடாரங்களுக்கு திரும்பியிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் ஐஜி விகே பிர்தி சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.