சொத்து தகராறு - அக்காவின் கணவரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற தங்கையின் கணவர்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் காஜாமைதீன் (40). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சர்மிளாபானு (38) வீட்டிலேயே தையல் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் சர்மிளாபானுவின் தங்கையான யாஷ்மின் (36) தனது கணவரான வாஜித் (40) மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சர்மிளா பானு தனது தங்கையான யாஷ்மினை ஜாமீன்தாரராக சேர்த்து தங்களது அம்மா பெயரில் உள்ள வீட்டு மனை இடத்தை அடமானம் வைத்து அதே வீட்டு மனை இடத்தில் வீடு கட்ட கடன் வாங்கியுள்ளார். காலப் போக்கில் கடனை திருப்பி செலுத்த முடியாததால் சகோதரிகள் இருவரும் தங்களது இடத்தை விற்றுள்ளனர். பின் இடம் விற்ற பணத்தில் பங்கு பிரிப்பதில் இருவரது குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை ஏற்ப்பட்டுள்ளது.
இதையடுத்து, சமாதானம் செய்வதற்காக சர்மிளாபானு தனது கனவர் காஜாமைதீனுடன் பிப். 19 அன்று இரவு தங்கை யாஷ்மின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தங்கை யாஷ்மினின் கணவரான வாஜித்ற்கும் காஜாமைதீனுக்கும் இடையே வீட்டிற்கு முன்பு வீதியிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காஜாமைதீன் கீழே விழுந்த நிலையில் வாஜித் அவர் மேல் அமர்ந்து அவரது நெஞ்சுப் பகுதியில் தொடர்ந்து கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார்.
அப்போது தடுக்க முயன்ற காஜாமைதீனின் மனைவியையும் கால்ப் பகுதியில் தாக்கியுள்ளார். பின் கத்தரிக்கோலை எடுத்து கொண்டு பைக்கில் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து சர்மிளா பானு கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெருமாநல்லூர் போலீசார் தப்பியோடிய வாஜித்தை நேற்று (பிப். 21) இரவு கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.