சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அம்மாபட்டியில் கணேஷ்வரி என்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென பயங்கர வெடி விபத்து எற்பட்டது. சுமார் 5 கி.மீ. தொலைவிற்கு சத்தம் கேட்டதை அடுத்தது அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தில் குவிந்தனர். விபத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : “இளம் பருவ காதலை குற்றமற்றதாக்குவது குறித்து பரிசீலிக்கவும்” – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். காலை நேரம் என்பதால் யாரும் பணியில் ஈடுபடவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்தவருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமையாளர் யார்? பட்டாசு ஆலைக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது வெடிவிபத்தும் ஏற்பட்டு உள்ளது. சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், மாவட்ட நிர்வாகம் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.