சென்னை | சிறையில் நண்பர்களான இருவர் - வெளிவந்த மறுநாளே திருட்டில் ஈடுபட்டு மீண்டும் சிறைவாசம்!
சென்னையில் குற்ற வழக்கில் சிறை சென்ற இருவர் நண்பர்களாகி வெளியே வந்த மறுநாளே 2 இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் மீண்டும் சிறை சென்றுள்ளனர்.
சென்னை OMR சாலை பொன்னியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து நடத்துநராக பாஸ்கர் (50) பணிபுரிந்து வருகிறார். இவர் சோழிங்கநல்லூர் குமரன் நகர் சிக்னல் அருகே உள்ள ஒரு டீ கடையில் வாகனத்தின் அருகில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அனால் அவர் வாகனத்தில் இருந்து சாவியை எடுக்காமல் இருந்துள்ளார்.
அந்த சமயத்தில் அங்கு R15 பைக்கில் வந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பாஸ்கரின் பைக்கை திருடி சென்றனர். தனது பைக் திருடப்பட்டதை பார்த்த பாஸ்கர் உடனிருந்த நண்பரின் பைக்கில் திருடி சென்ற பைக்கை பின்தொடர்ந்துள்ளார். திருடனை பிடிக்க முயன்ற போது அதிவேகத்தில் இளைஞர்கள் பைக்கை ஓட்டி தப்பி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள செம்மஞ்சேரி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 19ம் தேதி பாஸ்கர் புகார் அளித்தார்.
அதேபோல் OMR சாலை செம்மஞ்சேரி ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில் நிறுத்தி வைத்திருந்த R15 இருசக்கர வாகனம் காணவில்லை என 28 வயதான ஏழுமலை செம்மஞ்சேரி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரண்டு பைக்குகள் அடுத்தடுத்து திருடு போனதாக வந்த புகாரின் அடிப்படையில் செம்மஞ்சேரி குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜு, தலைமை காவலர் யாசர் அரபாத், காவலர் வீரமணி, ரவி, ரஃபிக், தினேஷ், அஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படை குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பைக் திருடப்பட்ட பகுதி மற்றும் வழியெங்கும் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று கே.கே.நகர் சாலையில் தனிப்படை போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, வாகன பதிவு எண் இல்லாமல் பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் வந்த பைக் திருடப்பட்ட பைக் என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது என போலீசார் தெரிவித்தனர். அதில் சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 24 வயதான பிரகாஷ்ராஜ் என்பவர் சென்னையில் உள்ள குமரன் நகர் காவல் நிலைய எல்லையில் பைக் திருடிய வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் புழல் சிறைக்கு சென்றது தெரியவந்தது. சென்னை குமரன் நகர் காவல் நிலையம், புறநகர் சேலையூர் காவல் நிலையம் என இருவேறு பகுதியில் நடைபெற்ற பைக் திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்கில் பிரகாஷ்ராஜ் - மோகன் இருவரும் சிறை சென்றுள்ளனர் . சிறையில் இருக்கும்போது இவர்கள் நண்பர்களாகி உள்ளனர்.
கடந்த டிச. 18-ம் தேதி புழல் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில் 150 பேர் இரவு 10 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறையில் பூத்த பிரகாஷ்ராஜ் - மோகன் இருவரின் நட்பு, வெளியே வந்த அடுத்த நாளே சென்னை சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதியில் அடுத்தடுத்து இரு பைக்குகளை திருடி சென்றுள்ளனர். மேலும் இருவரும் திருடிய பைக்கை மற்ற திருடர்கள் போல் விற்பனை செய்யவில்லை. அவர்கள் பைக்கில் உள்ள பெட்ரோல் தீர்ந்தால் அங்கிருக்கும் மற்றொரு பைக்கை திருடி ஊரை சுற்றி வலம் வந்துள்ளனர்.
கஞ்சா வாங்க தேவைப்படும் பணத்திற்கு வீட்டின் பூட்டை உடைத்து திருடுவதும், அவர்களுக்கு வழக்கமாக உள்ளது. மேலும் கஞ்சா புகைத்த பின்பு ஊரை சுற்ற பைக் தேவைப்படுவதால் பைக் திருடியதாக விசாரணையில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். போதையில் ஊரை சுற்ற பைக் திருடிய இருவர் அவர்களது நட்பு உருவான சிறைக்கே மீண்டும் சென்றனர்.