அதிகாரப்பூர்வ விவாகரத்து பெற்றனர் யுவேந்திர சஹல் - தனஸ்ரீ தம்பதி!
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளாரக இருப்பவர் யுவேந்திர சஹல். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீக்கு கிடைத்தது.
இதற்கிடையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டு இருந்தது. தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீக்கு ஆதரவாக சஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின. ஆனால் 2023-ம் ஆண்டில் சஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ வர்மா நீக்கினார். இருப்பினும் விவாகரத்து குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவகாரத்து பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இருவரும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. நேற்று மாலை நீதிபதி, அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
விவாகரத்தைத் தொடர்ந்து இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஸ்டோரியும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தனஸ்ரீ வர்மாவோ, “கடவுள் நம் கவலைகளையும் சோதனைகளையும் எப்படி ஆசீர்வாதங்களாக மாற்ற முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? இன்று நீங்கள் எதையாவது பற்றி மன அழுத்தத்தில் இருந்தால், உங்களுக்கு ஒரு தேர்வு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். கடவுள் உங்கள் நன்மைக்காக எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் சக்தி இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சாஹல், “நான் நம்ப முடியாத அளவுக்குக் கடவுள் என்னைப் பாதுகாத்துள்ளார். எனவே, எனக்குத் தெரியாத அளவுக்கு நான் மீட்கப்பட்ட நேரங்களை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.