ஆந்திராவின் கடப்பா மக்களவை தொகுதியில் களம் இறங்குகிறார் ஒய்.எஸ்.சர்மிளா!
ஆந்திராவின் கடப்பா மக்களவை தொகுதியில் களம் இறங்குகிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும் அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1-ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 17 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களின் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் குறிப்பாக ஆந்திராவின் கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.சர்மிளா போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தற்போதைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஆவார். ஒய்.எஸ்.சர்மிளா அண்மையில் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது ஆந்திர மாநில கடப்பா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலோடு ஒரு சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. அவற்றில் ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய இரு மாநிலங்களும் அடங்கும். இந்நிலையில், இந்த இரு மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலும் இன்று (02.04.2024) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஆந்திரா மாநிலத்தில் உள்ள 175 தொகுதிகளில் 114 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் 49 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவிற்கு மே 13-ஆம் தேதியும் ஒடிசாவுக்கு ஜூன் 1-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.