சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் 267 கிலோ தங்கம் கடத்தல் - யூ டியூபர் உள்ளிட்ட 9 பேர் கைது!!
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேரை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில், பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை மையமாக வைத்து, இந்தக் கடத்தல் நடப்பதாகவும் சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்கத்துறை தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த youtuber சபீர் அலி என்பவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இணை பொது மேலாளர் செல்வநாயகம் என்பவர் உதவியோடு, இந்த பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை, முறைப்படி இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதியுடன் தொடங்கி நடத்தி வந்தார்.
அதோடு, அந்த கடையில் 7 பேரை சபீர் அலி பணிக்கு அமர்த்தி இருந்தார். அவர்கள் அனைவருக்கும், சென்னை விமான நிலையத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான, சிறப்பு அனுமதி உடன் Pass-ம் வாங்கி இருந்தார். அதன் மூலம் வெளி நாடுகளில் இருந்து ட்ரான்சிட் பயணிகள் கடத்தி கொண்டு வரும் தங்க கட்டிகளை, விமான நிலைய பாதுகாப்பு பகுதியில் உள்ள கழிவறையில் மறைத்து வைத்து விட்டு, சபீர் அலிக்கு தகவல் சொல்லிவிட்டு சென்று விடுவார்கள்.
சபீர் அலி, தனது கடையில் உள்ள ஊழியர்களை அனுப்பி, தங்கத்தை தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து வெளியே கொண்டு வந்து, எந்தவித சுங்கச் சோதனையும் இல்லாமல், கடத்தல் கும்பலிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள். இவ்வாறாக கடந்த 2 மாதங்களாக இந்த கடத்தல் தொழில், சென்னை விமான நிலையத்தில் கொடி கட்டி பறந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, துபாயில் இருந்து ரூபாய் 1 கோடி மதிப்புடைய 1.6 கிலோ தங்கத்தை இலங்கை பயணி ஒருவர் கடத்தி வந்து, சென்னை விமான நிலைய கழிவறைக்குள் மறைத்து வைத்து விட்டு வெளியே வந்த போது, சுங்க அதிகாரிகள், அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இது பற்றிய முழு தகவல்கள் வெளிவந்தன.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை சேர்ந்த பயணி, சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை கடை நடத்தும் சபீர் அலி, அவர் கடையில் பணியாற்றும் 7 ஊழியர்கள் ஆகிய 9 பேரை கைது செய்து, மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சபீர் அலியுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிருத்வி என்பவர் வீட்டிலும் சுங்கத்துறை சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இவர் பாஜக பிரமுகர் என்றும் கூறப்படுகிறது. அதோடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலைய இணை பொது மேலாளர் செல்வநாயகத்தின் வீட்டில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கடத்தல் கும்பலில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு கடந்த 2 மாதங்களில், கடத்தி வரப்பட்ட ரூ. 167 கோடி மதிப்புடைய, 267 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.