கையில் பாம்புடன் வீடியோ வெளியிட்ட யூடியூபர் டிடிஎஃப் வாசன்... செல்லப் பிராணிகள் கடையில் வனத்துறையினர் திடீர் சோதனை!
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பாம்புக்கு கூண்டு வாங்க சென்ற திருவொற்றியூர்
செல்லப்பிராணி விற்பனையகத்தில், வனத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சர்ச்சைக்கு பெயர்போன பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் இரு தினங்களுக்கு முன்,
தடை செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டின் பைத்தான் எனும் அரிய வகை பாம்பு ஒன்றை
எடுத்துக் கொண்டு, சென்னை திருவொற்றியூரில் உள்ள ஜூபீஸ் என்ற செல்லப்பிராணி
விற்பனையகத்திற்கு கூண்டு வாங்குவதற்காக சென்றுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அந்த விற்பனையகத்தில் பாம்பு மற்றும் அதற்கான கூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து வேளச்சேரி வனக்காப்பாளர் மனுஷ்மீனா தலைமையிலான ஐந்து வன காவலர்கள், திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே உள்ள ஜூபீஸ் செல்லப்பிராணி விற்பனையகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரிய வகை
ஆப்பிரிக்கா கிளி, ஆமை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள்
சமர்ப்பிக்கப்படும் நிலையில் மீண்டும் கிளி, ஆமை கடை உரிமையாளர்களிடம்
ஒப்படைக்கப்படும். இல்லாவிடில் பறிமுதல் செய்யப்படும் என வனத்துறையினர்
தெரிவித்தனர்.