யூடியூபர் ‘பிரியாணி மேன்’ மேலும் ஒரு வழக்கில் கைது!
கிறிஸ்தவ மதத்தை இழிவு படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் ‘பிரியாணி மேன்’ என்ற அபிஷேக் ரபியை போலீசார் இன்று கைது செய்தனர்.
பிரபலமான யூடியூபராக அறியப்பட்டு வருபவர் அபிஷேக் ரபி. இவர் பிரியாணி மேன் என்ற பெயரில் சேனல் நடத்தி வந்தார். இந்த சூழலில் சென்னை செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் யூடியூபில் வீடியோ பதிவிட்ட நிலையில் இவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த 30ம் தேதி பிலிப் நெல்சன் லியோ என்பவர், சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் யூடியூபர் அபிஷேக் ரபி மீது மேலும் ஒரு புகாரை அளித்திருந்தார்.
அவர் அளித்த புகாரில், அபிஷேக் ரபி கிறிஸ்தவ மதத்தை இழிவு படுத்தும் விதத்தில் நடித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதாகவும், மற்ற மதத்தினரிடையே பகை, பயம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக குற்றம் செய்ய தூண்டும் நோக்கத்துடன் சமூக வலைதளத்தில் பதிவு செய்து கிறிஸ்தவ மதத்தை இழிவு படுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் புகார் அளித்த நபர் குறிப்பிட்டுள்ள இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளத்தின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கூடுதல் காவல் ஆணையாளர் மற்றும் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையாளரின் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து, வழக்கின் குற்றவாளியான அபிஷேக் ரபியை இன்று (ஆக.7) கைது செய்தனர். தொடர்ந்து விசாரணைக்குப் பின்னர் அபிஷேக் ரபி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.