‘ஆன்லைனில் பகுதிநேர வேலை’ நூதன முறையில் மோசடி செய்த இளைஞர்கள் கைது
தேனியில், பெண் ஒருவரிடம் ஆன்லைனில் பார்ட் டைம் வேலை எனக்கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட பெங்களூரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தேனி பாரஸ்ட் ரோட்டைச் சேர்ந்தவர் ரம்யா (28). இவர் தேனியில் உள்ள தனியார்
பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரின்
வாட்ஸ்ஆப்க்கு, `கை நிறைய சம்பாதிக்க பார்ட் டைம் ஜாப் வேண்டுமா... இந்த
லிங்க்கை கிளிக் பண்ணுங்க" என ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் வந்த
www.fliggt-networksite.com என்ற லிங்க்கை ரம்யா கிளிக் செய்துள்ளார். அதிலே
ஏர் டிக்கெட் புக் செய்யும் பணிக்காக தனது விவரங்களை பதிவு செய்துள்ளார்.
அதன்பின், வாலட் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் ரூ.10,000 முன்பணம் கட்டச்
சொல்லி உள்ளனர். மேலும், திறன் அடிப்படையில் செய்யும் வேலைக்கு ரேட்டிங்
வழங்கப்படும் எனவும், ஒரு சுற்றுக்கு 30 டாஸ்க்கள் இருக்கும். ஒரு நாளுக்கு 3
ரவுண்ட் வரை வேலை செய்யலாம். ஏர் டிக்கெட் புக்கிங் ஆவதை பொறுத்து 6 சதவிகித
கமிஷன் அடிப்படையில் பணம் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் வேலை செய்த வங்கிக் கணக்கில் ரூ.53,700 செலுத்தப்பட்டிருக்கிறது.
இதனால் உற்சாகமான ரம்யா மிகவும் ஆர்வத்துடன் தொடர்ந்து வேலை செய்துள்ளார். தொடர்ந்து டாஸ்க்கள் செய்ய வேண்டும் என்றால் முன்பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி 8 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர். ஆனால், தன் கணக்கில் சேர்ந்த பணத்தை எடுக்கவிடாமல் மேலும் டாஸ்க்கள் செய்ய வேண்டும் எனக் கூறி வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ரம்யா, தனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அதன்பின் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அப்போதுதான் அவர் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளார். இதையடுத்து தேனி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், பெங்களூரு லெக்கரே பகுதியைச் சேர்ந்த திலீப் குமார், சீத்தல் ஆகியோரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.