சிவகங்கையில் இளைஞர் வெட்டிக் கொலை - காவல்துறையினர் விசாரணை!
சிவகங்கை மாவட்டம் தமறாக்கி கிராமத்தை சேர்ந்தவர் செல்லச்சாமி மகன் மனோஜ் பிரபு (29). இவரது குடும்பம் தற்சமயம் சக்கந்தி கிராமத்தில் வசித்து வருகிறது. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து அன்மையில் சொந்த ஊர் திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனோஜ் பிரபு, ஹரிகரன், அஜித்குமார் ஆகிய இரு நண்பர்களுடன் அருகில் உள்ள இடையமேலூர் திருவிழாவில் நடைபெறும் கலைநிகழ்ச்சியை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சக்கந்தி நோக்கி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் புதுப்பட்டி அருகே காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளியதுடன் தப்பியோட முயன்ற மனோஜ் பிரபுவை மட்டும் விரட்டி சென்று கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு மீண்டும் காரில் ஏறி தப்பி சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மனோஜ்குமார் நண்பர்கள் உடனடியாக சிவகங்கை நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு நண்பர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோஜ் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.