For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சமூக வலைதள காதலால் சிக்கிய இளம்பெண் - விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார்!

09:48 AM Feb 21, 2024 IST | Web Editor
சமூக வலைதள காதலால் சிக்கிய இளம்பெண்   விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார்
Advertisement

முகம், குணம் தெரியாத சமூக வலைதள காதலால் இளம்பெண் சிக்கிக் கொண்ட விவகாரத்தில்,  விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர் சைபர் க்ரைம் போலீசார்.

Advertisement

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்த முகமது (23) என்ற இளைஞர் மற்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இதனிடையே, அந்த இளம் பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் முடிந்த நிலையில், முகமது உடனான தொடர்பை அந்த பெண் துண்டித்துள்ளார்.

இதனால், ஆவேசம் அடைந்த முகமது, அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அவரது கணவர் குறித்த தகவல்களை சமூக வலைதள நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் பழகிய காலத்தில் அனுப்பப்பட்ட புகைப்படங்களை தொழில்நுட்ப முறையில், ஆபாச முறையில் மார்ஃபிங் செய்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள், இது தொடர்பாக தென்காசி போலீசாரிடம் புகார் அளித்தனர். எனவே, தென்காசி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுவை தேடி வந்தனர். இந்நிலையில், முகமது அவரது வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், தென்காசி சைபர் குற்றப்பிரிவு போலீசார் நாகப்பட்டினம் விரைந்து சென்று முகமதுவை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

பின்னர் தென்காசி அழைத்து வரப்பட்ட, அவரை தென்காசி நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். சமூக வலைதளம் மூலம் முகம் தெரியாமல், குணம் தெரியாமல் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் பழகி தங்களது புகைப்படங்கள் மற்றும் விவரங்களை அனுப்புவதால் பல்வேறு பிரச்னைகள் நாளுக்கு நாள் அரங்கேறி வரும் நிலையில், பொதுமக்கள் இது போன்ற விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு சமூக வலைதளங்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement