"நான் பார்த்த முதல் முகம் நீ" - அன்னையர் தினம் எப்படி வந்தது? முதலில் எங்கு கொண்டாடப்பட்டது?
அன்பு என்றாலே அம்மாதான். அவர் தங்கள் குழந்தைகள் மீது காட்டும் சுயநலமற்ற அன்பு, அவரின் தியாகம் மற்றும் அரப்பணிப்புகளை போற்ற தினமும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும். இருப்பினம் தாய்மார்களின் தியாகத்தை போற்றவும், அவர்களை கௌரவிக்கும் விதமாகவும் அன்னையர் தினத்திற்கு ஒருநாள் கொடுக்கப்பட்டுள்ளது. மே மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு இன்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. எந்த நாளும் தன் குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் உழைத்துக் கொண்டே இருக்கும் தாய்மார்களை அன்னையர் தினத்திலாவது கொண்டாடுவது அவசியமாகிறது.
உலகந்தோறும் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் மே 10ஆம் தேதியை அன்னையர் தினமாகக் கொண்டாடுகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மே மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக கொண்டாடுகின்றனர்.

இந்த நாளில் தாய்மார்களை மகிழ்விக்கும் விதமாக பரிசளிப்பது, அவர்களை பொழுதுபோக்கு இடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர். சிறப்பு மிக்க அன்னையர் தினம் முதலில் எப்படி வந்தது தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரின் முயற்சியால்தான் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது என கூறப்படுகிறது.
அன்னையர் தின வரலாறு
கடந்த 1908ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த அண்ணா ஜார்விஸ் என்பவர் முதன் முதலில் அன்னையர் தின கொண்டாட்டத்தை முன்னெடுத்தார். அவர் தனது தாயாருக்காக அன்னையர் தினத்தை அனுசரித்தார். இவருடைய தாயார் ரீவிஸ் ஜார்விஸ் சமூக சேவகியாக வாழ்ந்தவர். உள்நாட்டுப் போரில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு இவர் சேவை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. நாட்டுக்கும், வீட்டுக்கும் அளப்பரிய சேவைகளை செய்த தன் தாயாரை நினைகூரும் விதமாகத்தான் அன்னையர் தினத்தை அண்ணா ஜார்விஸ் கொண்டாடத் தொடங்கினார்.
