நீங்க மட்டும் வந்தா போதும், விசா வேண்டாம் - ஈரான் அரசின் புதிய அறிவிப்பு!
இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் உட்படச் சுமார் 33 நாடுகளின் குடிமக்கள் ஈரான் நாட்டிற்குள் நுழைய விசா தேவையை நீக்குவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
உலக நாடுகள் அடுத்தடுத்து இந்தியா உடனான உறவை மேம்படுத்தவும், இந்தியா உடனான வர்த்தகத்தை மேம்படுத்தவும், இந்தியர்களைச் சுற்றுலாப் பயணியாக ஈர்க்கவும் விசா பெற வேண்டிய கட்டாயத்தைத் தளர்த்தி வருகிறது. இலங்கை, தாய்லாந்து, மலேசியா வரிசையில் தற்போது ஈரான் இணைந்துள்ளது. இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் உட்படச் சுமார் 33 நாடுகளின் குடிமக்கள் ஈரான் நாட்டிற்குள் நுழைய விசா தேவையை நீக்குவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஈரான் உலக நாடுகள் உடன் வெளிப்படைத்தன்மை மற்றும் ஈடுபாட்டை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இப்புதிய அறிவிப்பு மூலம் ஈரான் அரசு சுமார் 45 நாடுகளில் இருந்து மக்களை விசா இல்லாமல் ஏற்றுக்கொள்கிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஈர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஈரானிய கலாச்சாரப் பாரம்பரியம், சுற்றுலா மற்றும் கைவினைப்பொருட்கள் அமைச்சர் எஸதுல்லாஹ் ஜர்காமி தெரிவித்துள்ளார்.