“எனக்கு விருப்பமில்லாத கோர்ஸில், மிகவும் கடினமான கோர்ஸில் என்னை சேர்த்துவிட்டீர்கள்” - அண்ணா பல்கலை. மாணவி உருக்கமான கடிதம்!
பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு அண்ணா பல்கலைக்கழக வளாக விடுதி அறையில் மாணவி உயிரை மாய்த்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரோஜ் பெனிட்டா (21) என்ற மாணவி B Arch மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதோடு அப்பல்கலைக்கழக வளாகத்தில் SAP Girls Hostel அறை எண் C6 ல் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அவரது அறையில் இருந்த சக தோழிகள் அனைவரும் வகுப்பிற்கு சென்றுள்ளனர். சரோஜ் பெனிட்டா மட்டும். வகுப்பறைக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் இடைவேளை பிரேக்கில் அறை மாணவி ஒருவர் தனது அறையில் மறந்து வைத்து விட்டு சென்ற புத்தகத்தை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அறைக்கதவு உள்பக்கமாக தாழிட்டிருந்திருக்கிறது. அப்போது நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் வார்டனை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்தது. கோட்டூர்புரம் போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மாணவியின் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் தாய் திருநெல்வேலியில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்.
“எனக்கு விருப்பமில்லாத கோர்ஸில் மிகவும் கடினமான கோர்சில் என்னை சேர்த்துவிட்டீர்கள்.” நான் சென்று வருகிறேன்" என பெற்றோருக்கு எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.