கேரளா: கோயில் திருவிழாவில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட யானைகள்... அலறியடித்து ஓடிய பக்தர்கள்!
கேரளாவில் கோயில் திருவிழாவின் போது இரண்டு யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கேரளாவில் யானைகள் கோயில் திருவிழாக்களில் அலங்கரிக்கப்பட்டு சுவாமி சிலைகளை சுமந்து வருவது வழக்கம். அப்போது சில யானைகள் திடிரென மதம் பிடித்து பக்தர்களை விரட்டும் காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வருகின்றன. அந்த வகையில் கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஆராட்டுப்புழா பகுதியில் பூரம் இறுதி விழாவான ’உப்பச்சரம் சொல்லல்’ என்ற நிகழ்ச்சி நேற்று (மார்ச் 22) நடைபெற்றது.
இந்த பூரம் விழாவில் ரவிகிருஷ்ணன், அர்ஜுனன் என்ற இரண்டு யானைகள் கலந்து கொண்டன. யானைகள் ஆடி அசைந்து நன்றாக வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் யானைகள் நேருக்கு நேர் நடந்து வரும்பொழுது திடீரென இரண்டு யானைகளும் மோதலில் ஈடுபட்டன. யானைகளை கட்டுப்படுத்த பாகர்கள் முயற்சி செய்தும் அவைகளை கட்டுப்படுத்த இயலவில்லை.
இதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், யானைகளும் ஒன்றின் பின் ஒன்றாக மிரண்டு ஓடின. இதில் நான்கு பேர் காயம் அடைந்தனர். அத்துடன் அருகில் இருந்தவர்களை யானை தாக்க முயற்சித்த போது, யானையின் பாகன் ஸ்ரீகுமார் (53) என்பவர் நூலிழையில் உயிர்தப்பினார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய ரவிகிருஷ்ணன் யானையை, யானை பாகன்கள் சாந்தப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.