இன்று முதல் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!
பொறியியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் ஏப்ரல் 2ம் தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியானது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.53% அதிகம்.
மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கின்ற நிலையில் 2024 - 25 ஆண்டுக்கான பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர விரும்புகிறவர்கள் இன்று முதல் அதற்காக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: பாடப் பிரிவுவாரியான தேர்ச்சி விகிதம்!
இது குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) தெரிவித்ததாவது :
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் ஜூன் 6 வரை www.tneaonline மற்றும் org www.dte.gov.in என்ற இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணம், OBC, BC, BCM, MBC, DNC பிரிவினருக்கு ரூ.500, மற்றும் SC, ST பிரிவினருக்கு ரூ.250.
இவ்வாறு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) அறிவித்துள்ளது.