செண்பகாதேவி அம்மன் கோயிலில் மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சி!
செண்பகாதேவி அருவியில் நடைபெற்ற மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றார்கள்.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் மலைப்பகுதிக்குள் செண்பகாதேவி நீர்வீழ்ச்சி உள்ளது.
இந்த நீர்வீழ்ச்சியின் அருகே செண்பகாதேவி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இயற்கை அழகு நிறைந்த அடர்வன பகுதியில் உள்ள இந்த கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பௌர்ணமி திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இதையும் படியுங்கள் : திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட தங்கம் - சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!
அந்த வகையில், இந்த ஆண்டும் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மலையேறி கோயிலுக்கு சென்று செண்பகாதேவி அம்மன் கோயிலில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
செண்பகாதேவி அம்மன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் பக்தர்கள் மலையேறும் போது வனவிலங்குகளை தொந்தரவு செய்ய கூடாது எனவும், குரங்குகள் உள்ளிட்ட வன உயிரினங்களுக்கு உணவளிக்க கூடாது எனவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான செண்பகாதேவி அருவியில் மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளதால் செண்பகாதேவி அம்மன் கோயில் முழுவதும் வனத்துறையினர் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்வின்போது பக்தர்கள் செண்பகாதேவி அருவியில் குளிக்க வனத்துறையினர் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தோர்கள் இருதய நோய் பிரச்னை உள்ளவர்கள் மூச்சுத் திணறல் உள்ளவர்கள் மலையேற வேண்டாம் என வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, கோயிலுக்கு செல்வதற்காக மலைப்பகுதிக்கு ஏறும் பக்தர்கள் தங்கள்
ஆதார் அடையாள அட்டையை வனத்துறையினரிடம் காண்பித்து அவர்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்த பிறகு மலைப்பகுதிக்குள் ஏற வேண்டும் எனவும், மேலும் மலைப்பகுதிகளுக்குள் செல்பவர்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.