இரண்டாம் நிலை காவலர் பணியிட எழுத்து தேர்வு இன்று நிறைவு!
தமிழ்நாட்டில் 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறையில், ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல்படை, 2ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சீறுடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
இரண்டாம் நிலைக் காவலர் ஆயுதப்படையில் 780 பெண்கள், இரண்டாம் நிலைக் காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 1,819 ஆண்கள் சிறை மற்றும் சீர்திருத்தத்துறையில் இரண்டாம் நிலைக் காவலர் 86 பதவி ஆண்கள் – 83, பெண்கள் – 3, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பாளர் 674- ஆண்கள் ஆகிய பதவிகள் அடங்கியது.
இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக 2 லட்சத்து 84 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.40 மணி வரை தேர்வு நடைபெற்றது. இன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.