விவசாயிகள் போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனை #VineshPhogat
பஞ்சாப் - ஹரியானாவின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என ஹரியானா மாநில அரசு தெரிவித்தது. தொடர்ந்து தாய்நாடு திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹரியானா காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தீபேந்தர் ஹூடா அவரை விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார். அண்மையில், வினேஷ் போகத் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அவரது நெருங்கிய உறவினர் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : திருப்புகழ் குழு அறிக்கையை மர்மமாகவே வைத்திருப்பது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி!
பஞ்சாப் - ஹரியானாவின் ஷம்பு எல்லையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி அங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய விவசாயி கூறியதாவது :
"பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு விவசாயிகள் அமைப்புகள் பலமுறை கடிதம் எழுதியும் எந்த பதிலும் வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தற்போது 3வது முறையாக பதிவியேற்றுள்ளார். ஆனால், எங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து தரவில்லை"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.