மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் - சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாக வீடியோ வெளியிட்டு பதில்!
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாக வீடியோ வெளியிட்டு அவர் பதில் அளித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டெல்லி காவல்துறை பதிலளிக்குமாறும், மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாத வகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமிருந்த 47 வாக்குகளில் 40 வாக்குகளை பெற்ற சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் நண்பராவார்.
இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சாக்ஷி மாலிக் கதறி அழுததுடன், மல்யுத்த விளையாட்டை விட்டே விலகுவதாக தெரிவித்தார். சாக்ஷி மாலிக்கின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏறப்படுத்தியுள்ள சூழலில், தனது பத்மஸ்ரீ விருதை பிரதமர் நரேந்திர மோடியிடம் திரும்ப ஒப்படைக்க உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கடந்த வருடம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 10-ம் தேதி சோனிபட்டில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாற்கான சோதனையில் சிறுநீர் மாதிரியை வழங்கத் தவறியதற்காக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையால் காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
मेरे बारे में जो डोप टेस्ट के लिए ख़बर आ रही है उसके लिये मैं स्पष्ट करना चाहता हूँ !!! मैंने कभी भी नाडा अधिकारियों को sample देने से इनकार नहीं किया, मैंने उनसे अनुरोध किया कि वे मुझे जवाब दें कि उन्होंने पहले मेरा sample लेने के लिए जो एक्सपायरी किट लाई थी, उस पर उन्होंने क्या… pic.twitter.com/aU676ADyy3
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) May 5, 2024
இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்த பஜ்ரங் புனியா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது...
“ என்னை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்துமாறு கூறப்பட்ட செய்தியை தெளிவுபடுத்த விரும்புகிறேன். NADA அதிகாரிகளுக்கு எனது மாதிரியை வழங்க நான் ஒருபோதும் மறுத்ததில்லை. ஆனால் எனது மாதிரியை எடுக்க அவர்கள் கொண்டு வந்த காலாவதியான கிட் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு பதிலளிக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். இதன் பின்னர் எனது ஊக்கமருந்து சோதனையை எடுக்க வேண்டும் என சொன்னேன். சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எனது வழக்கறிஞர் விதுஷ் சிங்கானியா உரிய பதிலளிப்பார்” என பஜ்ரங் புனியா தெரிவித்தார்.