மகளிர் ப்ரீமியர் லீக் 2024 : 2-வது வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் ஐபிஎல் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்தாண்டு நடைபெற்ற தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றது. இந்த தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதையும் படியுங்கள் : “விளவங்கோடு தொகுதி இடைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும்” – கார்த்தி சிதம்பரம் எம்.பி பேட்டி
மகளிர் பிரீமியர் லீக்கின் 2வது தொடர் பெங்களூரில் பிப்-23 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரிலும் டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூர், உ.பி. ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.
இதையடுத்து, நேற்றிரவு நடந்த 3-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்ஸை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி வேகமாக விக்கெட்டுகளை இழந்து தடு மாறியது. வேதா கிருஷ்ணமூர்த்தி (0), ஹர்லீன் தியோல் (8 ரன்), ஹேமலதா (3 ரன்), ஆஷ்லி கார்ட்னெர் (15 ரன்), சினோ ராணா (0) ஆகியோர் குறைவான ரன்னில் தடுமாறினர். இறுதியாக குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்னில் எடுத்தது.
இதையடுத்து களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 129 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 46 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.