கிறிஸ்துவ தேவாலயங்களில் வழிபாடு - திருப்பதி தேவஸ்தான அதிகாரி பணியிடை நீக்கம்!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரில் ஒரு சிலர் வேற்று மதங்களை சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுடைய பெயர்கள் இந்து மதத்தவர் போல் காணப்படும். ஆனால் அவர்கள் வேற்று மதத்தை குறிப்பாக கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு இருப்பவர்களில் ஒரு சிலர் துணை நிர்வாக அதிகாரி பதவிகளிலும் உள்ளனர்.
அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம், குடியிருப்பு வசதி, போக்குவரத்து வசதி, குழந்தைகளுக்கு கல்வி கட்டணம், இலவசமாக தரமான மருத்துவ வசதி, தேவஸ்தானத்தில் பணியாற்றுவதால் உறவினர்கள் அடிக்கடி வருவார்கள். எனவே உறவினர்களுக்காக, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுக்கிறது.
ஆனால் தேவஸ்தானத்தில் பணியாற்றுபவர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. இந்த நிலையில் இந்துக்கள் அல்லாதோர் சுமார் 20 பேர் தேவஸ்தானத்தில் பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவிர மேலும் ஏராளமான இந்துக்கள் அல்லாததோர் கடைநிலை ஊழியர்களாகவும் ஒப்பந்த ஊழியர்களாகவும் பணியாற்றுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்த நிலையில் தேவஸ்தானத்தில் துணை நிர்வாக அதிகாரி அந்தஸ்தில் வேலை செய்து வரும் ராஜசேகர் பாபு ரகசியமாக கிறிஸ்தவராக மாறி சொந்த ஊரான புத்தூரில் இருக்கும் சர்ச்சுக்கு ஒவ்வொரு வாரமும் வழிபாட்டுக்காக செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை.
எனவே அவருடைய நடவடிக்கைகள் பற்றி தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் நடத்திய ரகசிய கண்காணிப்பை தொடர்ந்து விஜிலன்ஸ் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேவஸ்தானத்தில் பணியாற்றும் இந்து அல்லாத அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு விருப்ப ஓய்வு அல்லது அரசு துறைகளுக்கு மாற்றம் ஆகிய ஏதாவது ஒன்றை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவுகளை மேற்கொண்டது. ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் இங்கேயே வேலை செய்வோம் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.