உலகின் மிக நீளமான தோசை - 75 சமையல் கலைஞர்கள் ஒன்றிணைந்து கின்னஸ் சாதனை!
பெங்களூரில் 75 சமையல் கலைஞர்கள் ஒன்றிணைந்து 123 அடி நீளமுடைய தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
உலகம் முழுவதும் தோசைக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். தோசை என்றாலே கூடுதலாக சாப்பிடும் வழக்கமுடையவர்களும் உண்டு. இந்நிலையில் பெங்களூரில் 75 சமையல் கலைஞர்கள் சேர்ந்து 123 அடி நீளம் கொண்ட தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
கர்நாடகாவின், பெங்களூரில் உள்ள MTR ஃபுட்ஸ் என்ற தனியார் உணவு நிறுவனம் தனது நூற்றாண்டை கொண்டாடும் விதமாக இந்த தோசையை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் 54 அடி நீளமான தோசையின் முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது. இந்த தோசையை சுடுவதற்கு ஆறு மாத காலமாக முயற்சித்து வந்துள்ளனர். இந்த முயற்சியில் 110 முறை தோல்வியடைந்து 111 வது முறையாக வெற்றிப் பெற்றுள்ளனர். மேலும், இவர்களின் இலக்கு முதலில் 100 அடி தோசைதான் எனவும், பின்னர் தங்களுக்கு தாங்களே சவால் விடுத்து இந்த 123 அடி தோசையை உருவாக்கி உள்ளதாகவும் MTR ஃபுட்ஸ்ன் சமையல் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.