உலகின் உயரமான செனாப் ரயில் பாலம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆயிரத்து 315 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான ரயில் போக்குவரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் ஆகும்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு ரயில்வே பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து கம்பி வழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் திறந்து வைத்தார்.
பின்னர் ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடிக்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் நிதின் ஜெய்ராம் கட்கரி, அஸ்வினி வைஷ்ணவ், டாக்டர் ஜிதேந்திரசிங், வி.சோ மண்ணா, ரவ்னீத்சிங், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, துணை முதலமைச்சர் சுரிந்தர்குமார் சவுத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.