உலகின் முதல் தற்கொலைக் கருவி சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது எப்படி வேலை செய்யும்.., யார் யாருக்கு பயன்படுத்த அனுமதி என்பது குறித்து விரிவாக காணலாம்.
இயற்கையின் பல அதிசயங்களில் இன்று வரை அறியவே முடியாத முக்கியமான ஒன்று மரணம் தான். கருவுற்ற ஓர் உயிருக்கு உயிர் எப்படி வந்தது என்பதை கண்டறிவது எப்படி இயலாத காரியமோ, அதே போலத் தான் மரணித்தவரின் உயிர் எங்கே போனது என்பதற்கான விடையும்.
மதங்கள், தத்துவங்கள், கோட்பாடுகள் என மனிதனின் ஜனனம் முதல் மரணம் வரை பல கூறுகளை விளக்குகின்றன. அதேபோல எல்லா மதங்களும், தத்துவங்களும், மதம் இல்லை என சொல்லும் கோட்பாடுகளும் தன்னைத் தானே உயிரை மாய்த்துக் கொள்ள தடை செய்கின்றன.
மனிதன் எவ்வளவு பெரிய கஷ்டங்களை சந்தித்த போதும், பெரும் துயரங்களில் உழலும் போது, மிகக் கொடூரமான இழப்புகளை எதிர்கொள்கிறபோதும் அவன் உடைந்து சாவின் விழிம்பில் நிற்கிறான். ஆனாலும் அவனை ’தற்கொலை கூடாது’ என அனைத்து தத்துவங்களும் தடுத்து கைபிடித்து அழைத்து ஆறுதல்படுத்தி தேற்றுகின்றன.
விபத்தில் சிக்கி முக்கால்வாசி உடல் செயலிழந்தவர்கள், தீயில் கருகி மிச்சமான உயிருடன் போராடுபவர்கள், வாழவே இயலாத நிலையில் வெறும் உயிர் மட்டுமே துடித்துக் கொண்டே பிறந்த குழந்தைகள் என யாருக்கும் தற்கொலை செய்ய அனுமதில்லை. தங்களை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என அவர்கள் தரப்பில் சட்ட அமைப்புகளின் கடைசிப் புகழிடமான நீதிமன்றத்தை நாடும்போதும் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுக்கின்றன.
ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு விசித்திரமான முடிவுகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கெனவே அந்த நாட்டில் தற்கொலை செய்துகொள்ள அரசு அனுமதி வழங்கும் சட்டம் அமலில் உள்ளது. தி லாஸ்ட் ரிசார்ட் என அழைக்கப்படும் ஒரு அமைப்பு, சுவிட்சர்லாந்தில் உள்ள சர்கோ என்ற புதிய தற்கொலைப் பாட் எனப்படும் கருவியை தயார் செய்துள்ளது. இதற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் இது அடுத்த மாதத்திற்கு பின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019-ல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கருவி ஆக்ஸிஜனை நிறுத்தி நைட்ரஜனுடன் வெளியேற்றும். இதன் மூலம் மரணத்திற்கு அவை வழிவகுக்கிறது. சர்கோ காப்ஸ்யூலில் உள்ள செயல்முறை குறிப்பாக தானியங்கு தன்மை கொண்டது. ஒருவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பினால் முதலில் அவர் ஒரு மனநல ஆலோகரிடம் கவுன்சிலிங்கிற்கு தன்னை உட்படுத்தி தங்களின் மன திறனை உறுதிப்படுத்த வேண்டும். இதன் பின்னர் தற்கொலை காப்ஸ்யூலை பயன்படுத்தும் முன் தங்கள் அடையாளம் மற்றும் முகவரி என அனைத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். பின்னர் அதில் அமர்ந்து படுத்துக் கொண்டு பின்னர் அங்குள்ள பட்டனை அழுத்தினால், காப்ஸ்யூலின் உள்ளே ஆக்ஸிஜன் அளவு வேகமாக குறைந்து சுமார் ஐந்து நிமிடங்களில் சுயநினைவு இழந்து அது மரணத்திற்கு வழிவகுக்கிறது.
ஒருமுறை பட்டனை அழுத்திவிட்டு அதன் பின்னர் ரிவர்ஸ் செய்து கொள்வது சாத்தியமில்லை. தற்கொலை செய்துகொள்ளும் இந்த செயல்முறையில் வெளியாகும் நைட்ரஜனுக்கு கட்டணம் பிடிக்கப்படுகிறது. அதன்படி 18 சுவிஸ் பிராங்குகள் இந்திய மதிப்பில் தோராயமாக 2000 ரூபாய் வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
குறிப்பு : தற்கொலை செய்து கொள்வது தவறான முடிவாகும். அதுபற்றிய எண்ணங்கள் அடிக்கடி வந்தால் மன நல மருத்துவரை அணுக வேண்டும். அல்லது தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா அழைப்பு எண் 104க்கு கால் செய்யலாம்......