முதலாம் உலகப்போர் நினைவு தினம்- போர் நினைவிடத்தில் அஞ்சலி!
முதலாம் உலகப் போர் நினைவு நாளையொட்டி உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு புதுச்சேரியில் உள்ள போர்வீரர் நினைவிடைத்தில் பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
முதலாம் உலகப்போர் நிறைவு பெற்றதன் நினைவாகவும், வீரமரணமடைந்த வீரர்கள் நினைவாகவும் ஆண்டுதோறும் நவம்பர் 11 முதலாம் உலகப்போர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்ச் போர்வீரர் நினைவு சின்னத்தில் இந்தியாவிற்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர் தியரி மாத்தூ, துணைத் தூதர் லிஸ் டல்போட் பர்ரே, புதுச்சேரி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் வல்லவன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரார்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா,
பிரான்ஸ் நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரெஞ்ச் முன்னாள் ராணுவ வீரர்கள், புதுச்சேரியில் வாழும் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.