உலக ஓசோன் தினம் 2025!
உலக ஓசோன் தினம்
இன்று செப்டம்பர் 16 ஆம் நாள் உலக ஓசோன் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஓசோன் என்றால் என்ன..? அதன் முக்கியத்துவம் என்ன..? ஓசோனின் ஓட்டை தற்போது எப்படி உள்ளது..? என்று பார்ப்போம்.
ஓசோன் என்பது மூன்று ஆக்சிஜன் (O3) அணுக்களினால் ஆன ஒரு மூலக்கூறு ஆகும். இது பூமியின் மேற்பரப்பில் இருந்து 20 முதல் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள `ஸ்ட்ராடோஸ்பியர்' என்ற அடுக்கில் அமைந்துள்ளது. 1840ல் C.F. ஸ்கோண்டின் என்னும் பிரெஞ்ச் அறிவியலாளர்தான் ஓசோனை கண்டுபிடித்தார். ஓசோன் என்றால் கிரேக்க மொழியில் ஒருவகையிலான மணம் தருவது என்று பொருள்.
ஓசோனின் முக்கியத்தும்
பூமியில் உயிர்வாழ சூரியன் மிகமுக்கியம். சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்களை இரண்டாக பிரிக்கலாம் முதலாவது அகசிவப்பு கதிர்கள். இவை சூரியனிலிருந்து வெப்பம் மற்றும் ஆற்றலை பூமிக்கு கொண்டு வருகிறது. அடுத்து புற ஊதாகக்கதிர்கள். இக்கதிர்கள் அதிகப்படியாக பூமியில் விழுவதினால் மனிதர்களுக்கு தோல் புற்றுநோய், கண்புரை நோய்கள் ஏற்படும். மேலும் இது மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. அதுமட்டுமின்றி தாவரங்களின் உற்பத்தி திறனையும் பாதித்து மலட்டுதன்னைக்கும் வழிவகுக்கும். இதனால் மனித உயிரினமே அழியும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு பூமியை நோக்கி வரும் புறஊதாகதிர்களை 93% முதல் 99% வரை உறிஞ்சி பூமியை பாதுகாக்கும் பெரும்பணியை ஓசோன் செய்கிறது.
ஓசோனில் ஓட்டை
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களினால் வெளியிடப்படும் வேதிப் பொருட்களிணால் ஓசோனில் பாதிப்பு ஏற்படக்கூடும். குறிப்பாக குளிர்சாதன பெட்டிகள், ஏர் கண்டிஷனர்கள் போன்றவை வெளியிடும் குளோரோஃப்ளூரோகார்பன்கள், ஹைட்ரோகுளோரோஃப்ளூரோகார்பன்கள் , ஹாலோன்கள், கார்பன் டெட்ராகுளோரைடு போன்றவை ஓசோனை பாதித்து அதனைக் குறைத்து புற ஊதாகதிர்கள் பூமிக்குள் நுழைய காரணமாகின்றன.
1985ம் ஆண்டு பிரிட்டீஷ் விஞ்ஞானிகளின் ஆய்வில் அண்டார்டிகா பகுதியில் ஓசோனின் அடர்த்தி குறைந்திருப்பது உலகிற்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஐநா பெருமன்றம் ஓசோனை பாதுகாப்பபதற்ககான முயற்சிகளில் இங்கியது.
1985 மார்ச் 22 அன்று வியன்னாவில் ஓசோன் படலப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது என்றும் அதற்கான நெறிமுறைகளை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி செப்டம்பர் 1987 இல், ஓசோன் படலத்தை பாதிக்கும் பொருட்கள் குறித்த மாண்ட்ரீல் நெறிமுறைகளை ஐநா வெளியிட்டது.
இந்த மாண்ட்ரீல் நெறிமுறையின் முக்கிய நோக்கமாகனது, ஓசோன் படலத்தை குறைக்கும் பொருட்களின் மொத்த உலகளாவிய உற்பத்தி மற்றும் நுகர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அடிப்படையில் அவற்றை நீக்குவதே ஆகும்.
தற்போதைய நிலை
மாண்ட்ரீல் நெறிமுறைகளை திறம்பட செயல்படுத்தியதன் காரணமாக, 2000 ஆம் ஆண்டிலிருந்து ஓசோன் துளை சீராக மேம்பட்டு வருகிறது. தற்போதைய நடவடிக்கைகள் நீடித்தால் அண்டார்டிகாவில் 2066 ஆம் ஆண்டிலும், ஆர்க்டிக்கில் 2045 ஆம் ஆண்டிலும், வெப்பமண்டலப் பகுதிகளில் 2040 ஆம் ஆண்டிலும் ஓசோன் படலம் மீட்டெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓசோன் படலம் குணப்பட்டு வருவதென்பது, அறிவியலின் எச்சரிக்கைகளுக்கு நாம் செவிசாய்க்கும்போது, முன்னேற்றம் சாத்தியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்று ஐநா பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டில், ஐநாவின் பொதுச் சபையானது செப்டம்பர் 16 ஆம் தேதியை அனைத்துலக ஓசோன் பாதுகாப்பு தினமாக அறிவித்தது. 1987 செப்டம்பர் 16ல் கையெழுதிடப்பட்ட மாண்ட்ரீல் நெறிமுறை நினைவுகூரும் வகையில் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி இந்த நாளில் ஓசோன் பாதுகாப்பிற்கான உறுதி எடுப்போம்.
பூமியை ஆள்வது மனித இனம் என்றால் அதனை காப்பதும் மனித இனத்தின் பொறுப்பு.