For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பழனியில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு | அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

07:57 AM Mar 16, 2024 IST | Web Editor
பழனியில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு   அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு
Advertisement

பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை சிறப்பாக நடத்த அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  

Advertisement

உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் ‘உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு’ ஒன்றை வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பழனியில் நடத்த தமிழ் நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இரண்டு நாள்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களைச் சேர்ந்த அறங்காவலர்கள் அழைக்கப்படுவர். குறைந்தது 500 வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு இதனை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் முருகனைப் பற்றிய ஆய்வுகளுடன் கருத்தரங்கங்களும் சொற்பொழிவுகளும் இடம்பெறும். மாநாடு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பழனி முருகன் கோவில் குடமுழுக்கு ரூ.98 கோடி மதிப்பீட்டில் அழகு தமிழால் நடத்தப்பட்டது. படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் அறநிலையத்துறை நிதி ரூ.100 கோடி மற்றும் தனியார் பங்களிப்பு ரூ.200 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது. இதேபோல் திருத்தணி, திருப்பரங்குன்றம் கோவில்களிலும் திருப்பணிகள் நடக்கிறது.

இந்நிலையில்,  முத்தமிழ் முருகன் மாநாட்டினை நடத்த அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இது குறித்து  இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை சிறப்பாக நடத்திட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 20 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கடந்த 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு கூட்டத்தில்," தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024ம் ஆண்டில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோர்கள்.ஆன்மிக அன்பர்கள். முருக பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், விளம்பரப் பணிகள் மேற்கொள்ளுதல், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் முக்கிய பிரமுகர்களை வரவேற்று, அவர்களுக்கான வசதிகளை செய்து தருதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியீடு

இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவராக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், உறுப்பினர் செயலராக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், உறுப்பினர்களாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர், கூடுதல் ஆணையர்கள்

திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவர் மு.வெ.சத்தியவேல் முருகனார். திரு.சு.கி.சிவம், தேச மங்கையர்க்கரசி,ந.இராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் க.சந்திரமோகன், திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் மற்றும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு அரசால் அமைக்கப்பட்ட பின்னர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்கள் தலைமையில் செயல்பாட்டுக் குழு அமைத்து தேவைக்கேற்ப ஆலோசனைக் குழு கூட்டங்கள் நடத்தப்படும்.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Tags :
Advertisement