"உலக முருக பக்தர்கள் மாநாடு... 3D-ல் பிரத்யேக தரிசனம்" - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!
உலக முருக பக்தர்கள் மாநாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பம்சங்களை பட்டியலிட்டார்.
சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்களை இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே முதற்கட்ட கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்தை இன்று தொடங்கியுள்ளனர். அந்த வகையில், மூத்த குடிமக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு, துண்டு, குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது,
"முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு இறையருள் பெற நினைக்கும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதலில் ராமேஸ்வரத்திலிருந்து காசி செல்ல மூத்த குடிமக்கள் 200 பேருக்கு அரசு நிதியில் அனுமதி அளித்தார். இந்த ஆண்டு 300 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ராமேஸ்வரம் - காசி புனித பயணத்தில் 500 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த 500 பக்தர்களுக்கான செலவு தொகை 1 கோடியே 25 லட்ச ரூபாயை அரசு மானியமாக வழங்கியது. வயது முதிர்ந்தவர்கள் அறுபடை வீடுகளை ஒரே நேரங்களில் சுற்றி வருவது முடியாத ஒன்று. 1000 நபர்களை அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை அறிவித்து, அதற்கு மானியமாக ஒரு கோடியை 58 லட்சம் ரூபாயை அறிவித்து இதுவரை 49 பக்தர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஆடி மாதம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை ஆன்மிக பயணம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்று 250 பேர் 5 மண்டலங்களுக்க அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து 52 பேர் இந்த பயணத்தில் பங்கேற்கிறார்கள். இதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புரட்டாசி மாதம் 1000 மூத்த குடிமக்களுக்கு வைணவ கோயில்களுக்கான ஆன்மிக பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். இந்த ஆட்சி நிறைவு பெறுவதற்குள் 2000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது.
உலக முருக பக்தர்கள் மாநாடு வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் பழனியில் நடைபெற உள்ளது. முதலமைச்சரின் ஒட்டுமொத்த வழிகாட்டுதலின்படி மாநாட்டில் சிறப்பு மலர் வெளியிடப்பட உள்ளது. முருகரைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட உள்ளன. இதுவரை வெளிநாடுகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளும், வெளி மாநிலங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளும் வந்துள்ளன. தமிழ்நாட்டிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் வந்துள்ளன.
இந்த ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு புத்தகமாக வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் அமர்ந்து அந்த நிகழ்வுகளை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளை 3D வடிவில் வடிவமைத்து அருகில் முருகனை பார்ப்பது போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள், தங்குமிடம், வாகன வசதி என அனைத்து ஏற்பாடுகள் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. முருகனின் பல்வேறு பெயரிலான விருதுகள் வழங்கப்பட உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் தரமான உணவு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதுவரை நடைபெற்ற மாநாட்டில் இந்த மாநாடு தான் பெரிய அளவில் இருக்கும்"
இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.